தற்கொலை மிரட்டலால் தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் கேள்விக்குறியானது பாதுகாப்பு
திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு மனு கொடுக்க வரும் பொது மக்களை சோதனையிட்டு கண்காணிக்க, 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காவல்துறை பாதுகாப்பு வளையத்தை மீறி, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கும் நிகழ்வு தொடர்கிறது.
இதுநாள் வரை மண்ணெண்ணெய் மட்டும் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், 70 வயது மூதாட்டி தனலட்சுமி என்பவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மறைவான இடங்களையும் சோதனையிட வேண்டும். கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மிகப்பெரிய அசம்பாவிதத்தை போல், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எதிரொலிக்கக்கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், தனிக்கவனம் செலுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயன்ற மூதாட்டி தனலட்சுமியின் செயலை 2 பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி, குழாய் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று தண்ணீரை ஊற்றினர். பின்னர், ஆட்சியர் பா.முருகேஷிடம் தனலட்சுமி அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் நேரு நகரில் வசிக்கிறேன்.
எனது கணவர் மணி(84) என்பவர் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனது இளைய மகனுடன் வசிக்கும் கணவர் மணியை, 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர். நான் உட்படஉறவினர்கள் யாரையும் பார்க்கவும், பேசவும் அனுமதிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல், தான செட்டில்மென்ட் மூலம் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர். எனவே, எனது கணவரை மீட்டு தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
