கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது: மருத்துவப் பரிசோதனையின்போது ஒருவர் தப்பியோட்டம்

கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது: மருத்துவப் பரிசோதனையின்போது ஒருவர் தப்பியோட்டம்
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பாண்டியன்(58). இவர், தனது குடும்பத்தினருடன் மே 8-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பாண்டியனை இரும்புக் கம்பியால் தாக்கி வீட்டிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்பிலான காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பாண்டியன் வீட்டில் திருடிச் சென்ற கார் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் சாலையோரத்தில் இருப்பதாக மே 9-ம் தேதி பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று காரை மீட்டனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திருட்டு சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் விளாகுளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சூர்யா(23), சோலைமுத்து மகன் ரஞ்சித்(25), மதுரை வரிச்சூர் அரங்கன்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் அழகர்பாண்டி(32), சென்னை பெருங்குடி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த்(26), பெரம்பலூர்-ஆலம்பாடி சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாழை கருப்பு மகன் சுப்பிரமணியன்(53) ஆகிய 5 பேரும், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியில் நேற்று அதிகாலை காரில் வந்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, பாண்டியன் வீட்டில் திருடிச் சென்ற 4 பவுன் நகை மற்றும் அவர்கள் ஓட்டி வந்த வேறொரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸ் பிடியிலிருந்து பிரசாந்த் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தை தேடி வருகின்றனர். மற்ற 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in