Published : 16 May 2022 06:31 AM
Last Updated : 16 May 2022 06:31 AM

வாணியம்பாடியில் ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களை திருடியவர் கைது

கைதான ராஜ்குமார்.

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களை திருடிச்சென்ற இளைஞரை தனிப்படை காவல் துறையினர் 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச் சலம். இவர், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன உதிரிபாகங்களை மினிலாரியில் ஏற்றி அதை பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் மாலை அனுப்பி வைத்தார்.

மினிலாரியை சென்னையைச் சேர்ந்த அருள் (32) என்பவர் ஓட்டி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியை கடந்த அந்த மினிலாரியை ஓட்டுநர் அருள் சாலையோரம் நிறுத்திவிட்டு அருகேயுள்ள கழிவறைக்கு சென்றார். அரை மணி நேரம் கழித்துவந்து பார்த்த போது மினிலாரி அங்கிருந்து மாயமாகியிருந்தது.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அருள் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மற்றும் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத் துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

பிறகு, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, தலையில் குல்லா போட்ட நபர் ஒருவர் மினிலாரியை கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களுடன் தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தனிப்படை காவல் துறையினர் வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி நியூடவுன் பகுதி தர்மர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் தான் மினிலாரியை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, வாணி யம்பாடி பகுதியில் லாரியுடன் பதுங்கியிருந்த ராஜ்குமாரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த லாரி மற்றும் ஆட்டோ உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.

புகார் அளித்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை மடக்கிப்பிடித்த வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் மற்றும் தனிப்படை காவல் துறையினருக்கு திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x