

போபால்: மத்திய பிரதேசத்தில் அரிய கரும்புலி என்றழைக்கப்படும் மான்கள் உள்ளன. இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குணா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் வேட்டை கும்பல் நடமாடுவதாகப் போலீஸாருக்கு நேற்று அதிகாலை 2.45 மணிக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அந்த இடத்துக்குப் போலீஸார் ஜீப்பில் விரைந்து சென்றனர். அவர்கள் வரும் சத்தம் கேட்டு, மான் வேட்டையில் இருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து போலீஸ் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா கூறியதாவது:
அரான் என்ற அடர்ந்த வனப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வேட்டை கும்பல் சுட்டதில், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சந்த் குமார் மினா, காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஜீப் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். சமூக விரோதிகள் தப்பியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து 4 மான்கள், ஒரு மயில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கண்காணிப்பாளர் கூறினார்.