Published : 15 May 2022 08:25 AM
Last Updated : 15 May 2022 08:25 AM

திமுக கவுன்சிலர் மிரட்டியதாக புகார் - கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை

ராஜசேகர்

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமான புகாரில் திமுக கவுன்சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயினிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவர், அதே கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர், வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ராஜசேகர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

அதில் "எனது இந்த முடிவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதான் காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார். எனது தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி இரண்டரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தையும் திருப்பித் தராமல் அலைக்கழித்து வந்தார். பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டினார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரியை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே நேற்று மறியலில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்தை ஒன்றையும் சிறைபிடித்தனர்.

போலீஸாரின் பேச்சுக்குப் பிறகு, உயிரிழந்த ராஜசேகரின் மனைவி காந்திமதி முறைப்படி புகார் அளித்தார். அதன்பேரில், திமுக கவுன்சிலர் ஹரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.

நிதி முறைகேடு புகார்

அதேநேரம், கிராம ஊராட்சியில் நிதி முறைகேடு தொடர்பாக ராஜசேகர் மீது குற்றச்சாட்டு இருந்துள்ளது. இதுகுறித்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் அளித்துள்ள புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்காக ராஜசேகர் நேற்று முன்தினம் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், விசாரணைக்கு ஆஜாராகாத ராஜசேகர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x