

குன்றத்தூரில், குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குன்றத்தூரை அடுத்த மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத்(42). அனகாபுத்தூரில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார். இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டில் இருந்து 100 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை மர்ம நபர்கள் சிலர் சரியாக நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில்...
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.6 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாச நகரைச் சேர்ந்தவர் தர். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக உள்ளார். நேற்று முன்தினம் வெள்ளவேட்டில் உள்ள தனது உறவினர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, தர் அளித்த புகாரின் பேரில், செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவு காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.