Published : 14 May 2022 04:32 AM
Last Updated : 14 May 2022 04:32 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த புகாரின் பேரில் சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இந்த நிலங்கள் அனைத்தும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே தனி நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பரம்பரை பரம்பரையாக இந்த சொத்து தனக்கு வந்ததாகக் கூறி, போலியான ஆவணங்களை தயார் செய்து, அந்த நிலங்களை மற்றொரு தனி நபருக்கு எழுதிக் கொடுப்பது போன்று பத்திரப்பதிவு செய்துள்ளார். தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் பெயருக்கு அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சார் பதிவாளர் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் பாஜகவினர் மற்றும் விவசாயிகள், புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சார் பதிவாளர் மோகன்தாஸ், மறுநாள் (13-ம் தேதி) மதியம் 12 மணிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில், பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யாவிட்டால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என சசிகலா புஷ்பா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக பதிவுத் துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி மேற்பார்வையில், தூத்துக்குடி ஏஐஜி பால்பாண்டி விசாரணையைத் தொடங்கினார். இதில், விவசாய நிலங்கள் முறைகேடாக தனிநபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, ஏஐஜி பால்பாண்டி அளித்த அறிக்கை அடிப்படையில், புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து, பதிவுத்துறை திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி நேற்று உத்தரவிட்டார். அத்துடன், முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டது. புதுக்கோட்டை சார் பதிவாளர் பொறுப்பை, ஏரல் சார் பதிவாளர் வள்ளியம்மாள் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இந்த நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT