பெண் ஆடிட்டர் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி: மதுரையில் கணவன், மனைவி கைது

பெண் ஆடிட்டர் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி: மதுரையில் கணவன், மனைவி கைது
Updated on
1 min read

மதுரை: மதுரையில் பெண் ஆடிட்டர் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

மதுரை விசுவநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(61). ஆடிட்டர். இவரை ஆணையூரைச் சேர்ந்த புகழ் இந்திரா (45) கடந்த ஆண்டு சந்தித்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவரின் மகனும், நானும் பங்குதாரர்களாக இருந்து ஜேஜே என்கிற கட்டுமான நிறுவனம் நடத்துகிறோம் எனக் கூறி உள்ளார். இந்நிலையில், பஞ்சவர்ணம் மகளுக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக புகழ் இந்திரா கூறியுள்ளார்.

இதை நம்பிய பஞ்சவர்ணம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.47.60 லட்சம் கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு ஆட்சியர் கையெழுத்திட்ட உத்தரவு ஒன்றை ஸ்ரீபுகழ் இந்திரா கொடுத்துள்ளார். அதை ஆய்வு செய்தபோது, போலி உத்தரவு நகல் என்பது தெரிய வந்தது. பணத்தை பஞ்சவர்ணம் திருப்பிக் கேட்டபோது, புகழ் இந்திரா தரவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவரிடம் பஞ்சவர்ணம் பணத்தைக் கேட்டார். அப்போது தான் திமுகவில் சேர்ந்துள்ளதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகளை நன்றாகத் தெரியும், கூடுதலாக பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக புகழ் இந்திரா கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சவர்ணம், தான் ஏற்கெனவே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. ஆளும் கட்சி பெயரைக் கூறி பஞ்சவர்ணத்தை புகழ்இந்திரா மிரட்டியுள்ளார்.

பஞ்சவர்ணம் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகழ்இந்திரா, அவரது மனைவி ரேணுகா ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த தம்பதி யரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in