

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பெரிய குனிச்சி குறவர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சுதாகர்(30). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட்டில் பணியாற்றி வந்தார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2 ஆண்டு களுக்கு முன் சுதாகர் திருமணம் செய்தார். அதன்பிறகு சில மாதங்களுக்கு பிறகு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து, சுதாகர் முதல் மனைவியின் உறவினரான பஞ் சனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் ஆர்த்தி(20) என்பவரை சுதாகர் 2-வது திருமணம் செய்து கொண்டார்.ஆர்த்தி பர்கூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.மேலும், தம்பதியிடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த ஆர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்று அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதனால், வேதனையடைந்த சுதாகர் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆர்த்தியின் தாய் சித்ரா கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மரத்தில் தொங்கிய சுதாகர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.