

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 சிறுவர்களில் ஒருவர், விருதுநகரில் பூட்டிய அறையில் நீதித்துறை நடுவர் முன் நேற்று சுமார் ஒன்னே முக்கால் மணி நேரம் வாக்கு மூலம் அளித்தார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக, கடந்த மார்ச்சில் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவரது நண்பர்களான திமுக பிரமுகர் ஜூனத் அகமது (27), ரோசல்பட்டி பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாரிடமிருந்து இந்த வழக்கு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை சிபிசிஐடியிடம் ஒப்படைக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.
சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டு, விருதுநகரில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி வினோதினியும், டிஎஸ்பி சரவணனும் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட 4 சிறுவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த 4 சிறுவர்களில் 15 வயதான ஒருவர், தனக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்றும், இளம்பெண்தான், தன்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை செய்ததாகவும். அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர், உள்துறை செயலர், மாவட்ட நீதிபதி, ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவன், விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி முன் பூட்டிய அறையில் ஆஜராகி சுமார் 1 மணி நேரம் 45 நிமிடம் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, தனக்கு இவ் வழக்கில் தொடர்பு இல்லை என்றும், தன்னை இணைத்து பொய்யாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குமூலம் அடிப்படை யில் இச்சிறுவன் வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, இச்சிறுவனை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான மனுவை சிபிசிஐடி தாக்கல் செய்து அவரை சாட்சியாக்க உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.