Published : 12 May 2022 06:54 AM
Last Updated : 12 May 2022 06:54 AM
திருச்சி: திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு வாரத்துக்குள் 265 கஞ்சா வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் புலன் விசாரணையிலுள்ள கஞ்சா வழக்குகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படாமல் இருந்த வழக்குகள் குறித்து கடந்த 3.5.2022 முதல் 10.5.2022 வரை சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் 9 மாவட்டங்களில் புலன் விசாரணையில் இருந்த 699 கஞ்சா வழக்குகளில், கடந்த ஒரு வார காலத்துக்குள் மட்டும் 262 வழக்குகளின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 66, கரூரில் 45 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படாமல் இருந்தவற்றில் 27 வழக்குகளில் தற்போது நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் ஒரு வழக்கிலும், திருவாரூரில் ஒரு வழக்கிலும் கஞ்சா விற்பனை செய்தவருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இதுதவிர அதிகளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான, வணிக நோக்கத்துக்கான கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இதே பிரிவின் கீழான 2 வழக்குகளில் தற்போது நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புலன் விசாரணையிலுள்ள கஞ்சா வழக்குகளில் விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை திருச்சி, தஞ்சாவூர் சரக டிஐஜிக்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT