

கோவை: கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த விமல்குமார் என்பவர் யூ டியூப் சேனல் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கினார். அதில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையுடன் மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்தார். இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விமல்குமாரின் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தனர். ஆனால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு, முதலீடு செய்தவர்களுக்கு உரிய பணத்தை விமல்குமார் திருப்பி தராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அதில், ‘‘விமல்குமாரின் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.16 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் கூறியபடி தொகையை தராமல் மோசடி செய்து விட்டார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். அதன் பேரில், விமல்குமார், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.