Published : 11 May 2022 06:08 AM
Last Updated : 11 May 2022 06:08 AM
தாம்பரம்: ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ வாயிலாக, நாணயம் வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட இருவரை, தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). இவர் மேற்கு தாம்பரம் சிடிஓ காலனி, 3-வது பிரதான சாலையில் ‘காயின் பிளஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் ஏஜென்ட்டாக பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த அனுராதா(36) பணிபுரிந்து வந்தார். இவர் “வெங்கடேஷ் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு தங்க நாணயம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் வெங்கடேஷ் மற்றும் அவருடன் பணிபுரிந்த அனிதா (44) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: வெங்கடேஷ் மற்றும் அனிதா இருவரும் பொதுமக்களிடம், தங்கள் நிறுவனத்தில் முகவராக சேர்ந்து ஒருவர் 3 பேரைச் சேர்த்தால் அவருக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் எனக்கூறி ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த பேச்சை நம்பி, ஏராளமானோர் முகவர்களாக சேர்ந்து பணம் செலுத்தியதுடன் தங்க நாணயமும் வாங்கியுள்ளனர். அவர்களில் அனுராதா என்பவரும் முகவராக சேர்ந்து சுமார் 3 ஆயிரம் பேரை சேர்த்துள்ளார். அவர்களில் 199 பேருக்கு மட்டும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு நாணயம் வழங்காமல் வெங்கடேஷ் மற்றும் அனிதா ஆகியோர் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT