

பொன்னேரி: மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் இரு ரவுடிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒற்றை கை மூர்த்தி என்கிற மூர்த்தி (38). இவர் மீது 3 கொலை உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் வாயலூர் அருகே திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மதுபானக் கடை அருகே பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மூர்த்தி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பாரில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் மூர்த்தியை கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காட்டூர் போலீஸார், மூர்த்தி கொலை தொடர்பாக மோகன்ராஜ்(31), மணிகண்டன்(26), சுந்தர்(27), கிஷோர் குமார்(22), அருண்குமார்(22) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், மோகன்ராஜை மூர்த்தி கொலை செய்ய திட்டமிட்டதால், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூர்த்தியை மோகன்ராஜ் கொலை செய்தது தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொன்னேரி அருகே வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜவஹர் (40), கடந்த 8-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீஸார் விஜய்(33), கார்த்திக்(29), சூரியா(29), ராஜவேல்(23), பாலாஜி(23), வசந்த்(23) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஜவஹருக்கும், அவரது உறவினரான விஜய்க்கும் இடையே இருந்து வந்த முன் விரோதம் காரணமாக ஜவஹர், விஜய்யை கொலை செய்ய முயற்சித்தபோது, விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜவஹரை கொலை செய்தது தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.