சென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பிலான 6 தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பிலான 6 தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புள்ள 6 தங்க ஸ்பேனர்களை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (மே 9) இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த மெகபூபாஷா (26) என்பவர் ரியாத்திலிருந்து, துபாய் வழியாக சென்னை வந்தார். இவர் ரியாத்தில் பிளம்பராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி விட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவருடைய உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட முயன்றபோது, அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்றார்.

சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மெகபூபாஷாவை மீண்டும் அழைத்து, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவருடைய சூட்கேஸ்க்குள் டூல்ஸ் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதை சோதனை செய்தபோது, டூல்ஸ்களுக்கு இடையே மஞ்சள் கலா் ஸ்பேனா்கள் இருந்தன. அவை தங்க கலரிலான ஸ்பேனா்கள், இரும்பிலான ஸ்பேனா்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்று மெகபூபாஷா கூறினாா்.

சுங்கத்துறையினா் அந்த ஸ்பேனா்களை பரிசோதித்தபோது, மெகபூபாஷா வைத்திருந்த 6 ஸ்பேனா்களும் 24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட ஸ்பேனா்கள் என்பது தெரியவந்தது. அந்த 6 ஸ்பேனர்களும் மொத்தம் ஒரு கிலோ 20 கிராம் எடை இருந்தது. இந்த தங்க ஸ்பேனர்களின் சர்வதேச மதிப்பு ரூ. 48 லட்சம் ஆகும்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் 6 தங்க ஸ்பேனா்களை பறிமுதல் செய்து, தங்கத்தை ஸ்பேனர்கள் வடிவில் நூதன முறையில் கடத்தி வந்த மெகபூபாஷாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in