மதுரையில் தொழிலதிபர் கொலை: சொத்துக்காக நடந்ததாக போலீஸார் சந்தேகம்

கிருஷ்ணாராம்
கிருஷ்ணாராம்
Updated on
1 min read

மதுரை: மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணாராம்(70). இவரது மனைவி பங்கஜவல்லி(65). அதே பகுதியில் இவர்களுக்கு பல கோடிரூபாய் மதிப்புள்ள வீடுகள், கடைகள் உள்ளன. இவர்களுக்கு குழந்தைஇல்லாததால், 20 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கடந்த ஆண்டு இவரது வளர்ப்புமகள் வாகன ஓட்டுநர் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.பின்புசில நாட்களில் வளர்ப்பு மகளையும், மருமகனையும் கிருஷ்ணாராம் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். மருமகனுக்கு தனது இடத்தில் கிருஷ்ணாராம் பழச்சாறு கடை வைத்துக் கொடுத்துள்ளார். கடையை மருமகன் சரியாக நடத்தாததால் கிருஷ்ணாராம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த நிவேதாவும், அவரதுகணவரும் ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

கிருஷ்ணாராம் வீட்டின் மாடியிலும், கால் வலியால் பங்கஜவல்லி தரைத்தளத்தில் உள்ள அறையிலும் தூங்குவது வழக்கம். நேற்றுகாலை நீண்ட நேரமாகியும் கிருஷ்ணாராம் கீழே வரவில்லை. சந்தேகம்அடைந்த பங்கஜவல்லி, அருகில் வசிப்போரை பார்க்குமாறு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது, கிருஷ்ணாராம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் படுக்கையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை. எனவே, சொத்துகளை அபகரிக்க கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸார் கூறியது: வளர்ப்பு மகளும், மருமகனும் சேர்ந்து கிருஷ்ணாராமை தாக்கிவிட்டு வீட்டில்இருந்து வெளியேறி இருக்கலாம். கிருஷ்ணாராமுக்கு வீடுகள், கடைகள் வாடகை மூலம் மாதம் ரூ.3 லட்சம் கிடைத்துள்ளது. தனது சொத்துகளை விற்று அறக்கட்டளை தொடங்கலாம் என கிருஷ்ணாராம் திட்டமிட்டுள்ளார். இதனால் சொத்து கிடைக்காதோ என்ற விரக்தியில் மகளும், மருமகனும் கொலை செய்திருக்கலாமோ என சந்தேகிக்கிறோம். வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் ரூ.50 ஆயிரம் திருடுபோன விவகாரத்தில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அவரையும் விசாரிப்போம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in