Published : 10 May 2022 06:06 AM
Last Updated : 10 May 2022 06:06 AM
சென்னை: சென்னையில் இளைஞரின் செல்போனை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கொடி மரச்சாலையில் நேற்று முன்தினம் மதியம் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்தில் சிக்கியது.
இதைக் கண்டு அந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் இருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் ராஜ்குமார் இருவரையும் உடனடியாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு இளைஞர்களும் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘விபத்தில் சிக்கி உயிரிழந்த இரு இளைஞர்களும் தலைமைச் செயலகம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் செல்போனை பறித்து தப்பிச் செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT