Last Updated : 09 May, 2022 07:59 PM

 

Published : 09 May 2022 07:59 PM
Last Updated : 09 May 2022 07:59 PM

ராமநாதபுரம் | கணவரால் வதரட்சணைக் கொடுமை; போலீஸ் நடவடிக்கை இல்லை - ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற உமா மகேஸ்வரி

ராமநாதபுரம்: கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ராமேசுவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அவரை செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தி மீட்டனர்.

ராமேசுவரம் விட்டிப்பிள்ளை முடுக்குத் தெருவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (32) என்பவருக்கும், கீழக்கரையைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரமேஷ் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் குழந்தை பிறந்தது முதல் உமா மகேஸ்வரி ராமேசுவரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது கணவர் தனக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்ட 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், கீழக்கரை மற்றும் ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் மனு அளித்துள்ளார்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்தார். அதற்கும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மீண்டும் மனு அளிக்க தனது குழந்தையுடன் வந்துள்ளார் உமா தாயுடன் வந்தார். அப்போது குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு வெளியில் திடீரென கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த செய்தியாளர்கள் குமார், வீரகுமார் உள்ளிட்ட 3 பேர் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உமா மகேஸ்வரி கூறியதாவது: "குழந்தை பிறந்தது முதல் எனது கணவர், என்னையும், எனது குழந்தையையும் வந்து பார்க்கவில்லை. தொடர்ந்து ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு என்னை அவர் கீழக்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை. குடும்ப வறுமையில் உள்ள எனது பெற்றோரால் ரூ. 5 லட்சம் கொடுக்க முடியாது. அதனால் எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது நகைகளை பெற்றுத்தர ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் விட்டு அழுதவாறு தெரிவித்தார்.

அதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளியே வந்த மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உமா மகேஸ்வரியிடம் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் உமா மகேஸ்வரியை போலீஸார் விசாரணைக்காக கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதேபோல் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த முதியவர் மங்கு (82) என்பவர் ஆட்சியரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அவரை கேணிக்கரை சார்பு ஆய்வாளர் மாதவன் சோதனை செய்தபோது அவர் பெட்ரோல் கேனுடன் வந்திருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து பெட்ரோலை கேனை பறித்து அவரை விசாரணை செய்தார். இதுகுறித்து முதியர் மங்கு கூறும்போது, "எனது 22 சென்ட் நிலத்தை 4 மகன்கள் அபகரித்துக் கொண்டு, என்னையும், எனது மனைவியையும் பராமரிக்கவில்லை. எனது மகளுக்கும் நிலத்தில் பங்கு கொடுக்கவில்லை.

இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் ஆட்சியர் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொள்ள வந்தேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x