Published : 09 May 2022 05:36 AM
Last Updated : 09 May 2022 05:36 AM

சென்னை | தம்பதியை கொன்று கொள்ளையடித்த சம்பவத்தில் 6 மணி நேரத்தில் கொலையாளிகள் சிக்கினர்: ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

கொலையாளிகள் கிருஷ்ணா, ரவி.

சென்னை

சென்னை: சென்னை - மயிலாப்பூரில் தம்பதியைக் கொன்று புதைத்து நகைகள், காருடன் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர், அவரது நண்பரை போலீஸார் 6 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள ஆயிரம் பவுன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன.

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). தொழிலதிபரான இவர், குஜராத் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

மகள் சுனந்தா குழந்தை பெற்றிருந்ததால் அவரை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அங்கேயே 3 மாதம் தங்கியிருந்த இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினர். பெற்றோர் வீடு போய் சேர்த்து விட்டார்களா என விசாரிப்பதற்காக அவர்களது மகன் சஸ்வத், தந்தையை போனில்தொடர்பு கொண்டார். ஆனால்,போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர்களை விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான நேபாள நாட்டின் பீர்பா மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற பதம்லால் கிருஷ்ணாவை (45) தொடர்பு கொண்டு விசாரித்தார். இருவரும் வீட்டில் தூங்குவதாகவும் அவர்கள் எழுந்த பிறகு தகவல் தெரிவிப்பதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சஸ்வத் மீண்டும் கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகமடைந்த சஸ்வத், தனது உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து, மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் பரமேஸ்வரன் மயிலாப்பூர் வீட்டுக்குச் சென்றார். நீண்ட நேரமாக அழைத்தும் யாரும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். வீட்டில் சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. லாக்கரில் இருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. வீட்டுக்குள் ஆங்காங்கே ரத்தம் சிதறிக் கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பரமேஸ்வரன், உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில், காவல் கூடுதல் ஆணையர் கண்ணனின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மாயமானது தெரியவந்தது. வீட்டில் இருந்த காரையும் காணவில்லை. அந்த காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம், ஓட்டுநர் கிருஷ்ணா ஆந்திர மாநிலம் வழியாக நேபாளத்துக்கு தப்பிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஆந்திர மாநில போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

கார் செல்லும் இடத்தை துல்லியமாக தெரிவித்ததன் பேரில் ஓங்கோல் போலீஸார் அந்த காரை மறித்து ஓட்டுநர் கிருஷ்ணா, அவரது நண்பர் ரவி ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000 பவுன் தங்க,வைர நகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவை மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் ஆந்திரா சென்று கிருஷ்ணா, ரவி இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த், அனுராதாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாமல்லபுரம் அருகே நெமிலிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த், அனுராதா உடல்களை போலீஸார் தோண்டி எடுத்தனர்.

கொலையாளி கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா, 20 ஆண்டுகளாக ஸ்ரீகாந்திடம் வேலை செய்கிறார். நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் அவர்தான் காவலாளியாக இருக்கிறார். கிருஷ்ணா வாடகை கார் ஓட்டி வந்தார். தேவைப்படும் போது ஸ்ரீகாந்துக்காக அவர் கார் ஓட்டியுள்ளார். லால்சர்மா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஸ்ரீகாந்த், மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் ஒரு அறையை கிருஷ்ணாவுக்கு கொடுத்துள்ளார்.

கொலையாளி கிருஷ்ணாவுக்கு திருமணமாகி 15 வயதில் மகன் உள்ளார். அவர் தற்போது மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மகனை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று கிருஷ்ணா ஆசைப்பட்டார். இதனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யோசித்துள்ளார். அதன்படி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீகாந்த், அவரது மனைவியை கொலை செய்துநகைகளை கொள்ளையடித்துள்ளார் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட கிருஷ்ணா, போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: ஸ்ரீகாந்த்திடம் 15 ஆண்டு களுக்கும் மேலாக ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். அவரிடம் கோடிக்கணக்கில் பணம், நகைகள் இருப்பது தெரிந்தது. ஆனாலும் சொற்பமான சம்பளமே தருவார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட சிறிதாக ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே தருவார். வேறு எதுவும் தர மாட்டார். மகனின் படிப்பு செலவுக்காக அவரிடம் பணம் கேட்டேன். தர மறுத்துவிட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அண்மையில் விற்றுள்ளார். அந்த பணத்தை வீட்டில்தான் வைத்திருப்பார். அதை கொள்ளையடித்துக் கொண்டு நேபாளம் தப்பிச் சென்றுவிடலாம் என நினைத்தேன்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த எனது நண்பர் ரவியுடன் (39) சேர்ந்து திட்டம் வகுத்தேன். ஸ்ரீகாந்தை கொன்று நெமிலிச்சேரி பண்ணை வீட்டிலேயே உடலை புதைத்துவிடலாம் என திட்டமிட்டோம். அங்கு காவலாளியாக இருந்த எனது தந்தை ஊருக்கு சென்றுவிட்டது எங்களுக்கு வசதியாக போய்விட்டது. அதனால், முன்கூட்டியே பண்ணை வீட்டில் 2 குழிகளை தோண்டி தயார் நிலையில் வைத்தோம்.

அமெரிக்காவில் இருந்து வந்த ஸ்ரீகாந்த், அவரது மனைவியை மயிலாப்பூர் வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்றேன். உள்ளே வந்த சிறிது நேரத்தில் கொலை திட்டத்தை செயல்படுத்தினோம். தரை தளத்தில் இருந்த ஸ்ரீகாந்த் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்தேன். அதேநேரத்தில் முதல் தளத்தில் இருந்த அனுராதாவை ரவி தலையில் அடித்து கொலை செய்தார். இருவரது சடலங்களையும் பெட்கவரில் சுற்றி, காரில் ஏற்றினோம். வீட்டில் இருந்த சாவிக் கொத்தை எடுத்து நகைகளை 7 சூட்கேசில் எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி வீட்டுக்கு சென்றோம். உடல்களை குழியில் போட்டு புதைத்தோம்.

ரூ.40 கோடி பணத்துக்காகவே கொலை செய்தோம். ஆனால், அந்த பணத்தை ஸ்ரீகாந்த் வீட்டில் வைக்கவில்லை. அது கிடைக்காததால் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தோம். ஆனால், போலீஸார் எங்களை விரட்டி வந்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நெமிலிச்சேரி வீட்டில் புதைக்கப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா உடல்களை அரசு அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் தோண்டி எடுத்தனர். பின்னர், அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

எச்சரிக்கை தேவை

காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் கூறியதாவது: புதிதாக கார் ஓட்டுநர்களை பணியில் சேர்க்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதுகுறித்த தகவலை போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் அந்த நபர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என துல்லியமாக கண்டுபிடித்து தெரிவித்து விடுவோம். நம்பிக்கையின் அடிப்படையில் யாரையும் நியமிக்க வேண்டாம்.

கார் ஓட்டுநர்கள், பணியாளர்களை வைத்துக் கொண்டு அல்லது அவர்களுக்கு தெரியும்படி பணம், நகைகள் குறித்து பேசக் கூடாது. வரவு - செலவு கணக்குகளை பார்க்க வேண்டாம். சொத்து விவரங்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியும்படி ஆலோசிக்க வேண்டாம். இது சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x