Published : 09 May 2022 07:48 AM
Last Updated : 09 May 2022 07:48 AM

நாமக்கல் | அடகு கடை மேல் தளத்தை துளையிட்டு 13 பவுன், ரூ.1.20 லட்சம் கொள்ளை

நாமக்கல்: நாமக்கல்லில் நகை அடகுக் கடையின் மேல் தளத்தை துளையிட்டு உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் 13 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். அருகே மருத்துவமனை மற்றும் சில கடைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பாலாஜி சென்னைக்கு சென்றுள்ளார். கடையில் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அடகுக் கடை, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் காவலர் விஜயகுமார் கட்டிடத்தின் மேல்தளத்துக்கு சென்று பார்த்தபோது அடகுக் கடையின் மேல்தளத்தில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்துக்கும், கடை உரிமையாளர் பாலாஜிக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல் துறையினர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் மேல்தளத்தில் துளையிட்டு உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் கடையிலிருந்த 13 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை நடத்தினார். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

கொள்ளை குறித்து எருமப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களக்கு முன்னர் நாமக்கல் அருகே பெருமாள்கோயில் மேடு பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.4.89 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்நிலையில் தற்போது நகை அடகுக் கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x