

திருக்குவளை அருகே 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த வலிவலம் ஊராட்சியில் உள்ள காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தமிழ்ச்செல்வன்(57). ஈராசிரியர் பள்ளியான இங்கு தேவகி என்ற மற்றொரு ஆசிரியை பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 6 மாணவிகள், 2 மாணவர்கள் என 8 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமிக்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு செல்ல பயந்த சிறுமியின் தாயார், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கி ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
இதன் மூலம் தகவலறிந்த நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில், தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ சட்டம், காமவிரோதமாக பேசுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே, தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து கீழ்வேளூர் வட்டாரக் கல்வி அலுவலர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.