

வாலாஜா அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தியதுடன், சிறுமியை கல்வி நிலையத்தில் சேர்க்க ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உட்பட்ட கல்மேல்குப்பம் இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதியில் 16 வயது நிரம்பிய சிறுமிக்கும், 25 வயது இளைஞருக்கும் நேற்று திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்து சைல்ட் லைன் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண் டியன் உத்தரவின்பேரில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற இடத்துக்கு சென்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், குழந்தை திருமணம் குறித்தும், திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினார். 18 வயது வரை சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும் சிறுமியை கல்வி நிலையத்தில் சேர்க்கவும் பெற்றோரிடம் அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டனர்.
மேலும், 18 வயது பூர்த்தி யடையாத யாருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என ஜமாத் மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
72 திருமணங்கள் நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்ட சைல்டு லைன் 1098 அழைப்பின் மூலம் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரை காலகட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், வாலாஜா-8, ஆற்காடு-10, திமிரி -10, சோளிங்கர்-26, அரக் கோணம்-12, நெமிலி-4, காவேரிப்பாக்கம்-2 என்பது குறிப்பிடத்தக்கது.