

திருப்பூர்: ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகிய இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர் மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபுவிடம் கடந்த 4-ம் தேதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூரை சேர்ந்த இமான் ஹபீப் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி திருப்பூருக்கு வந்தேன். நாங்கள் இருவரும், காசிபாளையம் காஞ்சி நகரில் தங்கியிருந்தோம். எனக்கு நானே தாலி கட்டிக்கொண்டு பனியன் நிறுவன வேலைக்கு சென்று வந்தேன். என்னை, இமான் ஹபீப் பாலியல் வன்கொடுமை செய்தார்.
எங்களது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டார். என்னையும், எனது குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவுப்படி, 3 பிரிவுகளின் கீழ் இமான் ஹபீப் மீது நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.