Published : 06 May 2022 09:52 PM
Last Updated : 06 May 2022 09:52 PM

ரத்தக் காயங்கள், விலா எலும்புகளில் முறிவு: தி.மலை விசாரணைக் கைதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

உயிரிழந்த தங்கமணி (கோப்புப் படம்)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உயிரிழந்த விசாரணை கைதி தங்கமணியின் உடலில் காயங்கள் மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தட்டரணை கிராமத்தில் வசித்தவர் தங்கமணி (46). இவரை, சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக, திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. மறுநாள் (27-ம் தேதி) தங்கமணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்டவரை விடுவிக்க ரூ. 2 லட்சம் கொடுக்க மறுத்ததால், தங்கமணியை காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாக ஆட்சியர் பா. முருகேஷிடம், தங்கமணியின் மனைவி மலர் புகார் கொடுத்தார். அதன்பேரில், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கமணியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கமணியின் உடலை பெற்றுக் கொள்ள, அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி ராஜன் உட்பட 4 பேர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தங்கமணியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக, தங்கமணியின் உடலை அவரது குடும்பத்தினர் கடந்த 2-ம் தேதி பெற்றுக்கொண்டனர்.

இதனிடையில், தங்கமணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் இரண்டு மருத்துவர்கள், தங்கமணியின் உடலை ஏப்ரல் 28-ம் தேதி மாலை ஒன்றரை மணி நேரம் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், “வலது கையில் 2 இடங்களிலும், இடது கையில் ஒரு இடத்திலும் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. இந்த காயங்கள், இறப்பதற்கு 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ளன. மேலும் சுண்டு விரலுக்கு அருகே இடது கையின் பின்புறத்தில் உள்ள எலும்பில் 4 செ.மீ., அளவுக்கு ஆழமான ரத்தக்கட்டு உள்ளது. இக்காயம், இறப்பதற்கு 6 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது. நாக்கு நடுபகுதியில் காயம் உள்ளது. இதேபோல், விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. 3-வது மற்றும் 4-வது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு, ரத்தக்கட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், “தங்கமணியின் உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் 6 மணி நேரம் மற்றும் 12 - 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை மற்றும் சிறைத்துறை கஷ்டடியில் இருந்த போது ஏற்பட்ட காயங்கள் என உறுதியாகிறது. இதனால், விசாரணை கைதி தங்கமணியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x