

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுத்தமல்லி அருகே பழவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (40). கடந்த 23-ம் தேதி இங்குள்ள கோயில் கொடை விழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுத்தமல்லி சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரெசாவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவழக்கில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப. சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.