போலீஸ் வாங்கிய புட்டுக்கு பணம் கேட்ட இளைஞர்கள் கைது? - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

போலீஸ் வாங்கிய புட்டுக்கு பணம் கேட்ட இளைஞர்கள் கைது? - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
Updated on
1 min read

தாம்பரம்: புட்டு வாங்கிய போலீஸிடம் காசு கேட்டால், இளைஞர்கள் இருவரை சிட்லபாக்கம் போலீஸார் கைது செய்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை, ராதா நகர் பிரதான சாலையில், சிட்லபாக்கம் போலீஸார் கடந்த 1-ம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, செல்போனில் பேசியபடியே விக்னேஷ்வரன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை, பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் தடுத்து நிறுத்தி வாகனத்தின் சாவியை எடுத்தார்.

இதனால், விக்னேஷ்வரன் (22) அவரது அண்ணன் சிலம்பரசன் (29) என்பவரை, உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த சிலம்பரசனுக்கும் ஆயுதப்படை காவலர் சுரேஷுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், சிலம்பரசன் தாக்கியதில் சுரேஷின் செயின் அறுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிலம்பரசன், விக்னேஷ்வரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் போலீஸார் வேண்டுமென்றே தங்களை கைது செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் பேசிய மனோ என்ற இளைஞர், “நானும் கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன், சிலம்பரசன் ஆகியோரும் இணைந்து புட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறோம். அங்கு காவலர் சுரேஷ் வழக்கமாக வந்து புட்டு வாங்கிச் செல்வார். சில தினங்களுக்கு முன் புட்டு வாங்கிய அவரிடம், அதற்கு பணம் கேட்டோம். ஆனால், சுரேஷ் கொடுக்க மறுத்தார். இதை மனதில் வைத்து விக்னேஷ்வரன், சிலம்பரசன் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிந்து, போலீஸார் கைது செய்துள்ளனர்” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின், உண்மை தன்மை குறித்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் மறுப்பு

இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in