

சென்னை: திருட்டு வழக்குகளில் தொடர்புடைய உத்தரப் பிரதேச கொள்ளையன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷால் ஹிரே, சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியனை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்டு, “எங்கள் மாநில காவல் நிலையத்தில் பதிவான திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த அகமது அன்சாரி (19), மும்பை-எழும்பூர் விரைவு ரயிலில் சென்னை வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் எழும்பூர் ரயில்வே போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் வந்தபோது, அதில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, ரயிலில் இருந்த அகமது அன்சாரியை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.2.43 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை மகாராஷ்டிர மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துரிதமாகச் செயல்பட்டு கொள்ளையனைப் பிடித்த போலீஸாரை, ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா பாராட்டினார்.