Published : 03 May 2022 06:37 AM
Last Updated : 03 May 2022 06:37 AM

நாமக்கல்லில் 10 வயது சிறுமியை கடத்திய கணவன், மனைவி கைது

நாமக்கல் அருகே சிறுமி கடத்தல் வழக்கில் கைதான மணிகண்டன், அவரது மனைவி பொன்னுமணி.

நாமக்கல்: நாமக்கல்லில் முன்விரோதம் காரணமாக 10 வயது சிறுமியை கடத்திய கணவன், மனைவியை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

நாமக்கல் - துறையூர் சாலை அலங்காநத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சரவணன் (34). இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 10 வயதான மகள் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 1-ம் தேதி இரவு சரவணன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரவணன், அவரது மனைவியை கட்டிப்போட்டு சிறுமியை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், கவுசல்யாவை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் சிறுமியை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.50 லட்சம் தர வேண்டுமென மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் சிறுமியை மீட்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அலங்காநத்தம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காரில் வந்த நபர்கள் கடத்தப்பட்ட சிறுமியை இறக்கிவிட்டு தப்பினர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் காரில் சென்றவர்களை மடக்கிப்பிடித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், நாமக்கல் புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (35), அவரது மனைவி பொன்னுமணி (27) எனத் தெரியவந்தது. இருவரும் சரவணனிடம் கடன் வாங்கியுள்ளனர். அதனை திருப்பித் தர கால தாமதம் ஆன நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர்.

அப்போது பொன்னுமணியை, சரவணன் தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் சரவணனை மிரட்ட அவரது மகளை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x