

சென்னை: காவல் துறை விசாரணையின்போது இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், முன்னதாக அவர் தப்பிச் சென்றது மற்றும் அவரை போலீஸார் விரட்டிப் பிடித்த காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். அதில் வந்த திருவல்லிக்கேணி சுரேஷ் (28), பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25) ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மறுநாள் காலையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக போலீஸாரும், போலீஸாரின் தாக்குதலில் மரணம் அடைந்ததாக விக்னேஷ் குடும்பத்தினரும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. விக்னேஷ் இறந்தது தொடர்பாக 2 காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர் என 3 பேரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். விக்னேஷ் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படும் முன்பு, போலீஸாரிடம் இருந்து விக்னேஷ் தப்பிச் செல்வது மற்றும் அவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடிக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி அதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.