

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்துள்ள குருவராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபதி (40). இவர், கடந்த 6 மாதங்களாக அப்துல்லாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர், அப்துல்லாபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் இருப்பதை சிலர் பார்த்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் நிலவழகன் விசாரணை நடத்தினார். விசாரணையில், அப்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் ஹரி கிருஷ்ணன் (25), பரத் (28) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், ‘‘பூபதியுடன் ஹரிகிருஷ்ணன் மற்றும் பரத் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். அப்போது, பூபதியிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணத்தை ஹரி கிருஷ்ணன், பரத் ஆகியோர் பறித்துச் சென்றுள்ளனர். அதனை திருப்பிக் கொடுக்குமாறு இருவரிடம் நேற்று முன்தினம் பூபதி கேட்டுள்ளார். அவர்கள் தட்டிக்கழித்துள்ளனர்.
இதற்கிடையில், மூவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற பூபதி அங்கிருந்த ஹரி கிருஷ்ணன், பரத் ஆகியோருடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார். அப்போது, தன்னிடம் இருந்து பறித்துச்சென்ற பணம், செல்போன் குறித்து மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஹரி கிருஷ்ணன் மற்றும் பரத் ஆகியோர் மதுபான பாட்டில் மற்றும் கல்லால் தாக்கியதில் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது’’ தெரியவந்துள்ளது. இதையடுத்து, பூபதி கொலை வழக்கில் ஹரி கிருஷ்ணன், பரத் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.