கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.4.50 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸார்.
கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸார்.
Updated on
1 min read

கூடலூர்: கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.4.50 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக போதைப்பொருள் கடத்துவதாககேரள மாநிலம் வழிக்கடவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை, வழிக்கடவு சோதனைச்சாவடியில் போலீஸார் நேற்று முன்தினம்மாலை சோதனை செய்து கொண்டிருந்தனர். ஒரு லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீஸார், லாரியை சோதனை செய்தனர். அதில், காய்கறி மூட்டைகளை மேல்பக்கம் அடுக்கி, அதன் அடியில் ஏராளமான வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராபர்ட் (30), கிளீனர் பிரஷீத் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, கொரியா நாட்டு சிகரெட்களை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பெங்களூரு, மைசூரு, கூடலூர் வழியாக,எந்த வரியும் செலுத்தாமல் கேரளாவுக்கு கடத்தி வருவது தெரியவந்தது. 150 பண்டல்களில் 1½ லட்சம் பாக்கெட்டுகள் இருந்தன. ரூ.4.50 கோடி மதிப்புள்ள இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சுங்க அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் கூறும்போது, “பிடிபட்ட லாரி டிரைவர், ஏற்கெனவே மற்றொரு கடத்தல்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடக்கிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in