

செங்கல்பட்டு: திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் கவிப்பிரியா செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம்ஆண்டு சட்டம் படித்து வந்தார்.
கடந்த 28-ம் தேதி கவிப்பிரியாவை சக மாணவிகள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரது தந்தையிடம் செல்போன் மூலம் கவிப்பிரியா பேசிவிட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவிகள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 29-ம் தேதி மாலை கவிப்பிரியா உயிரிழந்தார். மாணவியின் தந்தைசிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கவிப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் உடலை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் அரசு அதிகாரிகள், கவிப்பிரியாவின் உறவினர்கள் மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்த பின் கவிப்பிரியாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர்பேரா.கவுரி ரமேஷ் விசாரணைஅலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கல்லூரியில்விசாரணை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.