Published : 02 May 2022 07:07 AM
Last Updated : 02 May 2022 07:07 AM
தஞ்சாவூர்: ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸார் நேற்று பறிமுதல் செய்து, கஞ்சா கடத்திய இளைஞரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் எப்.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமைக் காவலர் கே.இளையராஜா, காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தஞ்சாவூர் சரக டிஐஜியின் தனிப்படை போலீஸார் நேற்று காலை திருத்துறைப்பூண்டி ரவுண்டானா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டியைச் சேர்ந்த சு.மகேஸ்வரன்(26) என்பவரை கைது செய்தனர்.
‘‘கஞ்சா கடத்தி வந்த காரில் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட், தமிழகத்தின் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட் உட்பட 3 நம்பர் பிளேட்டுகள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் மற்றும் கைது செய்யப்பட்ட மகேஸ்வரனை திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்’’ என தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT