

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கடந்த பிப். 1-ம் தேதி திமுகவின் 188-வது வட்டச் செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வத்தை, கூலிப்படை கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் முத்து சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கூலிப்படைக்கு தலைவராக செயல்பட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசனை அம்பத்தூர் பகுதியில் துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்து, பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். முருகேசனின் தகவலின் அடிப்படையில் மடிப்பாக்கம் 188-வது வார்டில் திமுக வட்ட துணை செயலாளர் குட்டி என்கிற உமாமகேஸ்வரன்(43), திமுக வட்ட மீனவர் அணி அமைப்பாளர் சகாய டென்ஸி (55), ரியல் எஸ்டேட் தரகராக உள்ள புரட்சி பாரதம் கட்சி செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ரவி(எ) ரமேஷ் (39), வேளச்சேரி ராம்நகர் பத்திரப் பதிவு எழுத்தாளரான ஜெயமுருகன் (42) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கடைசியாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 4 பேருக்கும் செல்வத்துக்கும் இடையே ரியல் எஸ்டேட், பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. இதனால், நேரடியாக செல்வத்தை வீழ்த்த முடியாது என்பதால் கூலிப்படையை வைத்து கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக முருகேசனிடம் பேரம் பேசி ரூ.40 லட்சம் பணத்தை கொடுத்து கொலை செய்ய கூறினர். மேலும், செல்வத்துடன் இருந்துகொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகள் குறித்துகூலிப்படையினருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளனர். கொலை நடப்பதற்கு முன்பும்,நடந்த பின்பும் ஒன்றும் தெரியாதது போல்அனைவரும் செல்வம் மற்றும் அவரின் மனைவியுடன் கூடவே இருந்துள்ளனர். இரண்டு முறை கொலை செய்ய முடியாதால் மூன்றாவது முறையாக தேர்தலை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கூலிப்படையினர் செல்வத்தை கொலை செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என போலீஸார் தெரிவித்தனர்.