

சென்னை: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள சென்னை போக்ஸோ நீதிமன்றம், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தை தன்னை 7 வயதில் இருந்து 16 வயது வரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியைஉதவியுடன் சிறார் நீதிக் குழும ஹெல்ப்லைன் எண்ணான 1098-க்கு கடந்த 2020-ல்புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சிறார் நீதிக் குழும உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் கிண்டி அனைத்துமகளிர் போலீஸார் அந்த சிறுமியின் 48 வயதான தந்தை ஆதவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது கடந்த 2020-ல்வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது சிறுமியின் கர்ப்பத்தை கலைத்தகுற்றத்துக்காக சிறுமியின் தாய் வனிதாவையும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போலீஸார் கைது செய்தனர்.
அரிதிலும் அரிதான வழக்கு
சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசுதரப்பில் வாதிடும்போது, ‘‘இந்த வழக்கில்,பெற்ற மகளிடமே தந்தை பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பெற்ற தாயே அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.அதனால், இந்த வழக்கை அரிதிலும்அரிதான வழக்காக பார்க்க வேண்டியுள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி எம்.ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே முதல்குற்றவாளியான, சிறுமியின் தந்தை ஆதவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.
அதேபோல, இந்த குற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்ட 2-வது குற்றவாளியான, சிறுமியின் தாயார் வனிதாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். அவர் அபராதமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.