கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை: சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள்

கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை: சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள்
Updated on
1 min read

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து. சகோதரிகளான இருவரை ஜோதிமுத்து திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி உ‌ஷாராணிக்கு சீமோன் அல்போன்ஸ் மைக்கிள் (14) என்ற மகனும், மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகனும் இருந்தனர்.

ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜுக்கும் (37), மகாலட்சுமிக்கும் தகாத பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக ரத்தினராஜ் கருதியுள்ளார். கடந்த 22.3.2020 அன்று சிறுவர்கள் சீமோன் அல்போன்ஸ் மைக்கிள், எட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் குளிப்பதற்காக ஊருக்கு தெற்குப் பகுதியில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 2 சிறுவர்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

உறவினர்கள் சிறுவர்களைத் தேடியபோது, கிணற்றுக்கு அருகே அவர்களது உடைகள், செருப்புகள் கிடந்துள்ளன. முத்துக் குளிக்கும் மீனவர்கள் உதவியுடன் சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ரத்தினராஜை கைது செய்தனர். தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, ரத்தினராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் நேற்று தீர்ப்பளித்தார். ‘இரண்டு ஆயுள் தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ரத்தினராஜ் அனுபவிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்’ எனநீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in