Published : 29 Apr 2022 06:40 AM
Last Updated : 29 Apr 2022 06:40 AM
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி ஆவாரம்பாளையம் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சமையல் தொழிலாளி. திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் இப்ராஹிம் (எ) பானு (40). இருவருக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், இப்ராஹிம் (எ) பானுவுக்கு ராஜேந்திரன் அவ்வப்போது ரூ.500, ரூ.1000 என பணம் அளிப்பது வழக்கம். கடந்த 2017 மே 27-ம் தேதி யூனியன் மில் சாலையிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அன்றைய தினம் இரவு, பணம் கேட்டு ராஜேந்திரனை நச்சரித்துள்ளார் இப்ராஹிம். இதில் ஏற்பட்ட தகராறில், இப்ராஹிம் கல்லால் தாக்கியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.4 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து இப்ராஹிமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இப்ராஹிமுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அரசு வழக்கறிஞர் ச.கனகசபாபதி ஆஜரானார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை, மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT