Published : 29 Apr 2022 06:54 AM
Last Updated : 29 Apr 2022 06:54 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவரின் இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மூதாட்டியிடம் ரூ.1,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தம்(62). இவரது கணவர் தர்மர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனது கணவரின் இறப்புச் சான்றிதழை வழங்கக் கோரி, எதுமலை கிராம நிர்வாக அலுவலரான அயனாபுரத்தைச் சேர்ந்த பி.சுரேஷிடம் அமிர்தம் விண்ணப்பித்திருந்தார்.
இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என சுரேஷ் கேட்டுள்ளார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாத அமிர்தம், திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
இந்தநிலையில், நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குச் சென்ற அமிர்தம், அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் ரூ.1,000 லஞ்சப் பணத்தை அளித்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் சுரேஷை (42) கையும், களவுமாக பிடித்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT