

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.5 கோடி மதிப்பிலான 10 டன் செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூருவில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த குடோனில் இரும்புக் குழாய்களை அடைத்து ஏற்றுமதி செய்வதற்கான 9 பெரிய மரப்பெட்டிகள் இருந்தன. அவைகளில் மூன்று பெட்டிகளில் மட்டுமே இரும்பு குழாய்கள் இருந்தன. மற்ற மரப்பெட்டிகளில் செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 10 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.7.5 கோடியாகும்.
சரக்குப் பெட்டகத்தில் முகப்பு பகுதியில் இரும்புக் குழாய்கள் உள்ள பெட்டிகளை வைத்துவிட்டு, பின்னால் செம்மரக் கட்டைகள் இருக்கும் பெட்டிகளை வைத்து மலேசியாவின் போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இரும்புக் குழாய்களை திரும்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்வதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றது யார் என்பது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.