

வேலூர்: வேலூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம் அடுக்கம் பாறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண், தனது ஆண் நண்பருடன் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி வேலூர் கோட்டை பூங்காவில் இரவு பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த தங்கச்சங்கிலி, பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை அபகரித்துச்சென்றனர்.
இது குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலூர் கஸ்பா மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணி கண்டன் (43), வசந்தபுரம் இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(21), தொரப்பாடி பெரிய அல்லாபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மாரிமுத்து (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப் பட்ட 3 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர் களுக்கான தண்டனை நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் சக்தி வேலுவுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அந்த தொகையை அவர் கட்ட தவறினால் கூடுதல் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கலைபொன்னி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து, 3 பேரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக் கப்பட்டனர்.