

திருப்பூர்: சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அவிநாசி கருக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (22). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி தன்னுடன் வேலை செய்த 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தார். பின்னர், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். அதில், குழந்தை திருமணம் செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, ராஜேஷுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.