பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை: சேலம் போக்ஸோ நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

தினேஷ்குமார்
தினேஷ்குமார்
Updated on
1 min read

சேலம்: ஆத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு சேலம் போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்புஅளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தளவாய்ப்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவரது தோட்டத்துக்கு கடந்த 2018-ம்ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் பங்கேற்பதற்காக பூக்களை பறிக்கச் சென்றார்.

பூக்களை பறித்த பின்னர் சிறுமி இரவு 7.30 மணியளவில் வீட்டில் தான் பறித்து வந்த பூக்களை கட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் சிறுமியின் தாயார் இருந்தார்.

அப்போது, அங்கு சென்ற தினேஷ்குமார், சிறுமியை வீட்டில் இருந்து வெளியில் இழுத்து வந்து கொடுவாளால் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் துண்டான தலையை சாலையில் வீசிச் சென்றார்.

அதிர்ச்சியடைந்த சிறுமியின்தாய் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சிறுமி பூப்பறிப்பதற்காக தினேஷ்குமாரின் தோட்டத்துக்கு சென்றபோது, அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். இதை சிறுமிஅவரது பெற்றோரிடம் கூறினால்அவமானமாகிவிடும் என்ற அச்சத்தில் சிறுமியை, தினேஷ்குமார் கொடூரமாக கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, தினேஷ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகையைபாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்கவும் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தினேஷ்குமாரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். தினேஷ்குமாருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in