

சென்னை: ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (42). கனடாவில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், பச்சையப்பன் மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, இணையதளம் மூலம்திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தார். இதையடுத்து, சென்னைபெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த செந்தில்பிரகாஷ் (42), பச்சையப்பனை தொடர்பு கொண்டு, “எனது தங்கைகணவரை இழந்துள்ளார். உங்களை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே, உங்களை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறார். உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டுள்ளார். மேலும், தங்கையின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த எண்ணைத் தொடர்புகொண்டு, பச்சையப்பன் பேசி வந்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் செந்தில்பிரகாஷுக்கு பச்சையப்பன் பல்வேறு தவணைகளில் ரூ.1.35 கோடி வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், பச்சையப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கணவன், மனைவிஇருவரும் குழந்தைகள் நலன் கருதி சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து பச்சையப்பன், செந்தில்பிரகாஷின் தங்கையிடம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்த பச்சையப்பன், செந்தில்பிரகாஷை தொடர்புகொண்டு, “உனது தங்கைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்துள்ளேன். அதை நேரில் வந்துபெற்றுக் கொள்ளவும்” என்று கூறி, மயிலாப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.
அப்போது, தனது மனைவியுடன் சேர்ந்திருப்பது குறித்து செந்தில்பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில்பிரகாஷ், பச்சையப்பனைத் தாக்கி, ரூ.3.60 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை பறித்துக் கொண்டார்.
பின்னர், கனடா திரும்பிய பச்சையப்பன் அண்மையில் மீண்டும் சென்னை வந்து, தான் ஏமாற்றப்பட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், செந்தில்பிரகாஷை கைது செய்தனர். இதற்கிடையில்,தனது தங்கையைப் போல செந்தில்பிரகாஷே குரலை மாற்றிப்பேசி, பணம் பறித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.