Published : 27 Apr 2022 07:02 AM
Last Updated : 27 Apr 2022 07:02 AM
சென்னை: திரைப்பட நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில், பண மோசடி செய்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டார்.
களவானி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர்விமல்(41). சென்னை கோயம்பேட்டில் வசிக்கும் இவர், கடந்த ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “நான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான, சென்னை போரூரில் வசிக்கும் சிங்காரவேலன் (45), என் பட நிறுவனத்தைப் பயன்படுத்தி 2018-ல் மன்னர் வகையறா என்ற படத்தைத் தயாரித்தார்.
அதற்காக, ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.5 கோடி பணம் வாங்கினார். படத் தயாரிப்பு நிறுவனம் என்னுடையது என்பதால், பணம் வாங்கிய ஒப்பந்தத்தில் நானும் கையெழுத்திட்டேன். ஆனால், படத் தயாரிப்புகான வரவு, செலவு அனைத்தையும் சிங்காரவேலன்தான் கவனித்தார். இவருக்கு உதவியாக மேலும் 2 பேர் பணிபுரிந்தனர்.
படத் தயாரிப்புக்காக எனது பெயரில் கோடம்பாக்கத்தில் உள்ளதனியார் வங்கியில் கணக்குத் தொடங்கப்பட்டது. அதை சிங்காரவேலன்தான் பராமரித்து, வரவு, செலவு கணக்குகளைப் பார்த்து வந்தார்.
இந்நிலையில், ‘கோபியிடம் வாங்கிய பணம், படத்தை தயாரிக்க செலவாகிவிட்டது. படத்தை விற்பனை செய்து, கோபிக்கு சேரவேண்டியத் தொகையை கொடுத்து விடுகிறேன். மீதமுள்ள பணத்தை, படத்தில் வேலை செய்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறேன்’ என்று சிங்காரவேலன் என்னிடம் உறுதி அளித்தார். அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து பெற்றார்.
மன்னர் வகையறா படத்தை விற்பனை செய்ததில், சிங்காரவேலனுக்கு ரூ.8 கோடி வரை கிடைத்துள்ளது. இந்நிலையில், நான் ரூ.5 கோடி வாங்கி, மோசடி செய்துவிட்டதாக கோபி தொந்தரவு செய்கிறார். மேலும், பணத்தைக் கேட்டு மிரட்டுகிறார். இதன் பின்னணியில் சதி நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விமல் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, சிங்காரவேலன் உள்ளிட்ட 3 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிங்காரவேலன் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிங்காரவேலனை விருகம்பாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT