

குத்தாலம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து 2 மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென மயிலாடுதுறை எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.ஜே.கே.மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு உதவி ஆய்வாளர் மங்களநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக மணிகண்டனுக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை காவல் ஆய்வாளர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
எனவே, காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.மில்டன் அருள் ராஜேந்திரனும், அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கோகுல கிருஷ்ணனும் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான புதிய மனுவை மனுதாரர் மயிலாடுதுறை எஸ்பியிடம் வழங்க வேண்டும். அவர் அந்த மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலித்து 2 மாதங்களில் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.