

கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி மகன் டேவிட் தீனா(22). இவருக்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் கடந்த ஓராண்டுக்கு முன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின், அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டேவிட்தீனாவை நேற்று கைது செய்தனர்.
பெரம்பலூரில்... பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் செல்வக்குமார்(26). ஏற்கெனவே திருமணமான இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியை கடந்த ஏப்.14 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், போக்ஸோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று செல்வக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.