

சேலம்: சேலத்தில் சுங்கத்துறை அதிகாரி போல நாடகமாடி ரூ.10 லட்சம் பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கேட்டை மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (32). இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். அபுபக்கர் சித்திக் தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்க அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் அண்ணாதுரையை சந்தித்தார். அவர், மதுரையைச் சேர்ந்த சக்திவேல் (49) என்பவர் மூலம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், அபுபக்கர் சித்திக்கை போனில் தொடர்பு கொண்ட சக்திவேல், 200 கிராம் தங்கக் கட்டியை குறைந்த விலைக்கு தருவதாகவும், சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 1-ம் தேதி சேலம் மல்லூர் பொய்மான் கரடு பகுதிக்கு வந்த அபுபக்கர் சித்திக்கை, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், நாழிக்கல்பட்டி துர்க்கை அம்மன் கோயில் ஏரிக்கரை பகுதியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, காரில் சக்திவேல் உள்பட 4 பேர் அங்கு வந்து, தாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் என்றும், கடத்தல் தங்கம் வைத்திருப்பதாகக் கூறி அபுபக்கர் சித்திக்கை மிரட்டி காரில் ஏற்றிச் சென்றனர். மேலும், ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் இருந்து இறக்கி விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து அபுபக்கர் சித்திக் கொடுத்த புகாரின் பேரில் மல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் பதுங்கியிருந்த சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், காரை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.