

தஞ்சாவூர்: பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூர் அருகே உள்ள வாண்டையார் இருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் ரவிச்சந்திரன்(55).
இவர், 20.9.2018 அன்று மதியம் பள்ளியில் படித்து வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அழுது கொண்டே வந்த சிறுமியிடம் சக ஆசிரியர்கள் விசாரித்தபோது, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சத்துணவு அமைப்பாளரான ரவிச்சந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், அபராதத் தொகையில் ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.