

திருப்பூர்: திருப்பூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதேபோல், மற்றொரு போக்சோ வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கொங்கு பிரதான சாலையை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் தீர்ப்பை நீதிபதி சுகந்தி இன்று அளித்தார். அதன்படி, கார்த்திக் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு: இதேபோல், அனுப்பர் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மற்றொரு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த ஜீவா (28), பாண்டி (30) உள்ளிட்ட 2 பேரை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஜீவா, பாண்டி ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி உத்தரவிட்டார். இதையடுத்து இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.