மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 3 பேர் கைது

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 3 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய தென்காசி பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக மதுரையை நோக்கி காரில் 3 பேர் சென்றனர். அப்போது கட்டணம் வசூலிக்க முயன்ற சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் துப்பாக்கியை (ஏர் பிஸ்டல்) காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. அவர்கள் மீண்டும் இந்த சுங்கச்சாவடி வழியாக திரும்பி வர வாய்ப்புள்ளதை அறிந்த போலீஸார், அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், கப்பலூர் தொழிற்பேட்டை அருகே டீக்கடை ஒன்றில் காருடன் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தஜெயக்குமார் (35), முத்துக்குமார் (34), பொன்ராஜ் (27) எனத் தெரிய வந்தது.

அந்தக் காரை சோதனையிட்டபோது ஏர் பிஸ்டல் துப்பாக்கி, தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள்தான் சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டியவர்கள் எனத் தெரிய வந்ததை அடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கியையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in